செய்திகள்

குமரக்கோட்டம் கோவிலில் சாமி சிலையை திருடி குளத்தில் வீசிய அர்ச்சகர் கைது

Published On 2018-04-04 14:51 IST   |   Update On 2018-04-04 14:51:00 IST
குமரக்கோட்டம் கோவிலில் சாமி சிலையை திருடி குளத்தில் வீசியதாக கோவில் அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கந்தபுராணம் அரங்கேறியதால் அதனை இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு 28 செ.மீட்டர் உயரம், 18 செ.மீட்டர் அகலத்தில் சுமார் 7½ கிலோ எடையில் வெண்கல சிலை தெற்கு பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த மாதம் 10-ந்தேதி அந்த சிலை திடீரென மாயமானது. இதுகுறித்து கோவில் செயல் அதிகாரி தியாகராஜன் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் சாமி சிலையை திருடியதாக கோவில் பூசாரி கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கச்சியப்பர் சிலையை அருகே உள்ள கோவில் குளத்தில் வீசியதாக அவர் தெரிவித்தார். கார்த்திக்கை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

தற்போது கோவில் குளத்தில் வீசப்பட்ட கச்சியப்பர் சிலையை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகிறார்கள். குளத்தில் அதிக அளவு தண்ணீர் இருப்பதாலும் சிலை வீசப்பட்ட இடம் சரியாக தெரியாததாலும் அதனை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Similar News