செய்திகள்
விசாரணைக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்

பழனி சிலை மோசடி விவகாரம் - கோவிலுக்கு நன்கொடையாக தங்கம் வழங்கியவர்களிடம் விசாரணை

Published On 2018-03-29 04:56 GMT   |   Update On 2018-03-29 05:42 GMT
பழனி கோவிலுக்கு ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலையில் நடந்த மோசடியை அடுத்து நன்கொடையாக தங்கம் வழங்கியவர்களிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
பழனி:

பழனி கோவில் மூலவர் சன்னதியில் உள்ள பழமை வாய்ந்த நவபாஷாண சிலைக்கு பதிலாக புதிய சிலை அமைக்க கடந்த 2004-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு சிலை வடிவமைக்கப்பட்டது. புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை சில மாதங்களிலேயே நிறம் மாறிப்போனதால் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு கோவில் லாக்கரில் தனியாக வைக்கப்பட்டது.

இந்த சிலை அமைக்க திருத்தணி கோவிலில் இருந்து 10 கிலோ தங்கம் நன்கொடையாக வாங்கப்பட்டது. மேலும் சிலரும் இந்த சிலைக்காக நன்கொடை வழங்கி உள்ளனர். சிலை அமைத்ததில் முறைகேடு நடந்தது 14 ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வரவே ஸ்தபதி முத்தையா மற்றும் அப்போது கோவில் இணை ஆணையராக இருந்த ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்க வேல் தலைமையில் டி.எஸ்.பி. கருணாகரன், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், சுரேஷ் ஆகியோர் நேற்று பழனி வந்தனர். பழனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த அவர்கள் தற்போது இணை ஆணையராக உள்ள செல்வராஜை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போதும் 2004-ம் ஆண்டு கோவிலில் ஆவணங்கள், அப்போது பணியில் இருந்த அதிகாரிகள், அவர்கள் தற்போது எங்கெங்கு உள்ளனர் என்று கேட்டறிந்தனர். மேலும் புதிய சிலை வைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சிலை அமைக்க தங்கம் நன்கொடையாக வழங்கியவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சிலை தயாரிப்பு பிரிவில் இருந்த முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் தனபால், உதவி ஆணையர் அசோக் ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் சிலை கடத்தல் தடுப்பி பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்ட பின் தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிலை மோசடி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன் வரிசையில் பழனி கோவிலில் உள்ள நவபாஷாண சிலையை கடத்தும் நோக்கில் புதிய சிலை வடிவமைத்து உள்ளனர். ஆனால் அந்த சிலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் நிறம் மாறிப் போனது.

உண்மையிலேயே புதிதாக அமைக்கப்பட்ட சிலை நிறம் மாறாமல் இருந்திருந்தால் அந்த சிலையை மூலவர் சன்னதியில் பிரதிஷ்டை செய்து விட்டு நவபாஷாண சிலையை எடுத்து சென்றிருப்பார்கள். சிலை அமைப்பதில் போதிய தங்கம் சேர்க்கப்படவில்லை.

இது தவிர தமிழகத்திலேயே அதிக வருவாயை ஈட்டித் தரும் பழனி முருகன் கோவிலில் தங்கத்துக்கு பஞ்சம் கிடையாது. அதிக அளவு தங்கம் பக்தர்களால் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது திருத்தணி கோவிலில் இருந்து 10 கிலோ தங்கம் வாங்கியதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்த உள்ளோம்.

இது தவிர சிலை அமைப்பதற்காக நன்கொடையாக யார்? யார்? தங்கம் அளித்தார்கள் என்று விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த விசாரணையில் முன்னாள், இன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் அடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் தற்போது கோவில் இணை ஆணையராக உள்ள செல்வராஜிடம் பெற்ற விபரங்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் தொடர் விசாரணை நடைபெறும் என்றும் அதில் அனைத்து அதிகாரிகளும் இடம் பெறுவார்கள் என்றும் விசாரணை குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விபரங்கள் தெரிந்தால் பொருந்தலாறு அணையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்களிடம் நேரடியாக அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News