செய்திகள்

கோவையில் தாய் பலியான சோகத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மகன்

Published On 2018-03-28 09:35 GMT   |   Update On 2018-03-28 09:35 GMT
கோவையில் தாய் பலியான சோகத்திலும் மகன் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வடவள்ளி:

கோவை வடவள்ளி பொம்மனாம்பாளையம் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிளம்பர் ராமச்சந்திரன் (வயது 36). இவரது மனைவி வெங்கடேஸ்வரி (32). இவர்களது மகன் அன்புச்செல்வன் (15) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ராமச்சந்திரனும், வெங்கடேஸ்வரியும் இடையர்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தனர். இதில் ராமச்சந்திரனும் அவரது மனைவியும் காயம் அடைந்தனர்.

இருவரும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று காலை வெங்கடேஸ்வரி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து நடந்தபோது ஏற்பட்ட காயத்தால் அவர் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது என்று டாக்டர் கூறினார்.

இந்நிலையில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வு நடைபெற்றது.

வெங்கடேஸ்வரியின் உடல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மகன் அன்புச்செல்வன் இன்று கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வு எழுதினார். அழுதுகொண்டே அவர் தேர்வு எழுதியது நெஞ்சை உருக்குவதுபோல் இருந்தது.

இது குறித்து ஆசிரியர் கூறும்போது, மற்ற மாணவர்கள் காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு அறையில் இருந்தே ஆக வேண்டும். தாய் இறந்து விட்டதால் சிறப்பு அனுமதியாக மாணவர் அன்புச்செல்வன் எப்போது வேண்டுமானாலும் தேர்வு அறையை விட்டு செல்லலாம் என்று கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் வெங்கடேஸ்வரியின் உடல் அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்லப்படுகிறது. #Tamilnews
Tags:    

Similar News