செய்திகள்

புழல் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன், கத்திகள் பறிமுதல்

Published On 2018-03-25 11:52 IST   |   Update On 2018-03-25 11:52:00 IST
புழல் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்குன்றம்:

புழல் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே கைதிகளிடம் கஞ்சா புழக்கம் இருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தன. மேலும் செல்போன்களை பயன்படுத்தி வெளியில் உள்ள ரவுடிகளிடம் பேசுவதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து புழல் ஜெயிலில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். இருந்தபோதும் கைதிகளிடம் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் புழல் ஜெயிலுக்குள் வெளியில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வீசிய சம்பவம் நடந்தது.

இந்த நிலையில் புழல் ஜெயிலில் கஞ்சா, செல்போன் மற்றும் போதை வஸ்துக்கள் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாக சென்னை போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மாதவரம் துணை கமி‌ஷனர் கலைச் செல்வன், எண்ணூர் உதவி கமி‌ஷனர் தினகரன், புழல் உதவி கமி‌ஷனர் பிரபாகரன் மற்றும் 63 போலீசார் இன்று காலை 6 மணிக்கு புழல் ஜெயிலுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கைதிகள் இருந்த ஒவ்வொரு அறைக்கும் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கைதியிடம் செல்போன் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர். மற்றொரு கைதியிடம் 2 சிறிய கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செல்போன் சார்ஜர், சிம்கார்டு, ரூ.500 பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாலையில் போலீசார் புழல் ஜெயிலுக்குள் அதிரடியாக சென்று இந்த சோதனையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஜெயிலுக்குள் செல்போன், கத்திகள் பறிமுதல் செய்தது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கைதிகளுக்கு செல்போன், பணம், கத்திகள் எப்படி கிடைத்தது? யார் சப்ளை செய்தார்கள்? என்று தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். #tamilnews

Similar News