செய்திகள்
மண்டல மாநாடு மேடை மாதிரியை திருச்சி சிவா பார்வையிட்டார். அருகில் தி.மு.க. மாவட்ட செயலாளர் முத்துசாமி உள்ளார்.

மாநில மாநாட்டை மிஞ்சும் வகையில் ஈரோடு தி.மு.க. மாநாடு அமையும்- திருச்சி சிவா எம்.பி.

Published On 2018-03-06 12:38 IST   |   Update On 2018-03-06 12:38:00 IST
மாநில மாநாட்டை மிஞ்சும் வகையில் ஈரோடு மண்டல மாநாடு தி.மு.க.விற்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்.
பெருந்துறை:

தி.மு.க. சார்பில் மாநில உரிமை, சமத்துவம், மதச்சார்பின்னை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தி வரும் மார்ச் 24 மற்றும் 25ம் தேதி ஈரோடு மண்டல மாநாடு நடைபெறுகிறது.

நீலகிரி, கோவை,திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 15 கட்சி மாவட்டங்களை கொண்ட இந்த மண்டல மாநாடு பெருந்துறையை அடுத்துள்ள சரளை பகுதியில் நடைபெறுகிறது.

இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக தி.மு.க. எம்.பி.யும், கொள்கை பரப்புச்செயலாளருமாகிய திருச்சி சிவா வந்திருந்தார். மாநாட்டுத் திடலை முழுவதுமாக பார்வையிட்ட அவர் கூறியதாவது:-

இந்த மாநாட்டிற்காக 41 ஆயிரம் சதுரடி பரப்பளவில் மாநாட்டு பந்தலும், 300 ஏக்கர் பரப்பளவில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்துமிடம், தலைவர்கள் அமர்வதற்காக கருங்கல் மேடை சுமார் 2 ஆயிரத்து 700 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தமேடையில் தலைவர்கள் ஓய்வு மற்றும் ஆலோசனை நடத்துவதற்கு ஏற்ற வகையில் முழுவதும் ஏசி கொண்ட 4 நிரந்தர அறைகள், ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் சேர்கள் மற்றும் ஆயிரத்து 400 சதுரடி பிரமாண்ட முகப்பு தோற்றம் என பார்ப்போர் பிரமிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

வருகிற 15-ம் தேதி முதல் புகைப்படக்கண்காட்சி நடைபெறுகிறது. மேலும் 26-ம் தேதி நூறு ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணமும் நடைபெறுகிறது. மாநில மாநாட்டை மிஞ்சும் வகையில் நடைபெறும் இந்த மண்டல மாநாடு தி.மு.க.விற்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Similar News