மணிசங்கர் அய்யரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் இருபிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் தலைமையில் ஒரு பிரிவினரும், முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை இருபிரிவினரும் தனிதனியாக நடத்தி வருகின்றனர். இது காங்கிரஸ் கட்சியில் இரு பிரிவு நிர்வாகிகளிடம் உச்சக்கட்ட புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மயிலாடுதுறை நகர காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது.
இதில் முன்னாள் மாவட்ட இளைஞர்தலைவர் ராம. சிதம்பரம், முன்னாள் நகர தலைவர் செல்வம், முன்னாள் மாவட்ட பொது செயலாளர் கமலநாதன்.செய்தி தொடர்பாளர் கனகசபை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மணிசங்கர் அய்யரை நிரந்தரமாக காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்க வேண்டும்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மயிலாடுதுறை சட்ட மன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கல்யாண ராமன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.
இதேபோல் நகர காங்கிரசில் மற்றொரு பிரிவு கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் தலைமையில் நடந்தது.
மாநில பொதுகுழு உறுப்பினர்கள் உத்தமன், நீடுர் நவாஸ், சிறுபான்மை பிரிவு துணைதலைவர் சம்சுதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர தலைவர் ராமானுஜம் வரவேற்றார் இதில் பூவாலைமதி, பத்ம நாபன், செய்தி தொடர்பாளர் சிவாஜிசேகர் கலந்து கொண்டனர். #tamilnews