செய்திகள்

பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து மேலும் 100 பேர் இடமாற்றம்

Published On 2018-03-02 13:53 IST   |   Update On 2018-03-02 13:53:00 IST
பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்த மேலும் 100 பேர் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர்.
காஞ்சீபுரம்:

உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு சென்ற வேனில் காய்கறி மூட்டைகளுடன், இறந்த ஆணின் உடல் எடுத்து செல்லப்பட்டது. அதே வேனில் 2 முதியோர்களும் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல்கள் காங்கிரீட் சுவரில் உள்ள துளையில் அட்டகம் செய்யப்பட்டு பின்னர் எலும்புகள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவுப்படி, வருவாய்த் துறை, சமூகநலத்தறை, போலீசார் உள்ளிட்ட 6 துறை அதிகாரிகள் கருணை இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது உரிய வசதிகள் இன்றி கருணை இல்லம் செயல்படுவதும் அதன் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மருத்துவத்துறை அதிகாரிகள் உதவியுடன் கருணை இல்லத்தில் இறந்தவர்களை பரிசோதனை செய்து வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் கருணை இல்லத்தில் சுய நினைவுடன் இருந்த 58 பேரை அரசுக் காப்பகத்திற்கு மாற்றினர். இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை 128 முதியோர்கள் மாற்றப்பட்டனர்.

படுத்த படுக்கையாக இருந்த 96 பேர் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சை முடிந்தவுடன் காப்பகங்களுக்கு அனுப்பப்படுவர்.

இந்த நிலையில் கருணை இல்லத்தில் இருந்த மேலும் 100 பேர் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். அனைத்து முதியோர்களும் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் கருணை இல்லத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து கோட்டாட்சியர் ராஜு கூறும்போது, கருணை இல்லத்தில் இருந்த 58 பேர் அரசுக் காப்பகங்களிலும், 128 பேர் பனையூர் மன வளர்ச்சி குன்றியோர் பெண்களுக்கான காப்பகம், சோழிங்கநல்லூர் அன்னை இல்லம், தண்டையார் பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் இயங்கும் அரசுக் காப்பகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்.

இதற்கிடையே மாவட்ட கலெக்டர் பொன்னையா கருணை இல்லத்தில் இறந்த வர்களின் உடல்கள் வித்தியாசமாக அடக்கும் செய்யப்படும் இடத்தினை அரசுத் துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.

காப்பக நிர்வாகி பாதிரியார் தாமசிடம் அடுத்தடுத்து பல்வேறு விபரங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அங்கு பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வரும் மருத்துவக் குழுவினரின் அறிக்கை அளிக்கப்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் காப்பக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது. #tamilnews

Similar News