செய்திகள்

அமைச்சர் கார் டிரைவர் மரணத்தில் சர்ச்சை- பிரேத பரிசோதனைக்குபின் உடல் ஒப்படைப்பு

Published On 2018-03-01 10:28 GMT   |   Update On 2018-03-01 10:28 GMT
தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கார் டிரைவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை:

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கார் டிரைவராக சவுந்தரராஜன் (37) என்பவர் பணிபுரிந்து வந்தார்.

சென்னை சூளைமேட்டில் வசித்து வந்த இவர் நேற்று காலை வழக்கம்போல பணிக்கு சென்றார். கிரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சரின் வீட்டில் இருக்கும்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

தன்னை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அருகில் இருந்தவர்களிடம் சவுந்தரராஜன் கூறியுள்ளார். அதன் பிறகு போலீஸ்காரர் சரவணன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

கடற்கரை சாலையில் சென்றபோது சவுந்தரராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளார்.

கோட்டையில் இருந்த அமைச்சருக்கு டிரைவர் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று டிரைவரின் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

டிரைவர் உடல் அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டதும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அங்கு சென்றார். அப்போது அவரிடம் உறவினர்கள், “உடனடியாக சவுந்தரராஜனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம். அதை செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

பின்னர் இதுகுறித்து அமைச்சர் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார்.

சவுந்தரராஜன் மரணத்தில் சந்தேகம் இருந்தால் போலீசில் புகார் செய்யுங்கள் என்றும், என் வீட்டில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது என்றும் கூறினார்.

ஆனால் கார் டிரைவரின் மனைவி மற்றும் உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சவுந்தரராஜன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. #Tamilnews
Tags:    

Similar News