செய்திகள்

மத்திய மந்திரி நிதின் கட்கரி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர மா.கம்யூ. வலியுறுத்தல்

Published On 2018-02-28 15:20 IST   |   Update On 2018-02-28 15:20:00 IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை என்று கூறிய நிதின் கட்கரி மீது தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து சென்னை வந்த பிரதமர் மோடி, எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முன்வர வேண்டும்.

ஆனால் மத்திய அரசின் எடுபிடியாக செயல்பட்டு வரும் பழனிசாமி அரசு, இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாது. எனவே எதிர்க்கட்சிகள் விவசாய இயக்கங்களோடு ஒருங்கிணைந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி பேரியக்கத்தை நடத்த வேண்டும்.

இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயல்வது கண்டனத்திற்குரியது. வட மாநிலங்களில் இந்தி தெரியாத தமிழக மாணவர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மொழி பிரச்சினையால் நடக்கும் கொலை, தற்கொலைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் சமீபகாலமாக தலித் குடும்பங்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்குகளை திசை திருப்பும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் தலைமையிலான குழு சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்த உள்ளது.

காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியில் கருணை இல்லம் என்ற பெயரில் செயல்படும் தொண்டு நிறுவனத்தில் மர்மசாவுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இறந்தவர்களின் எலும்புகள் வெளிநாட்டில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News