செய்திகள்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை வரலாறு பேசும் வகையில் கொண்டாடுவோம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2018-02-20 10:05 GMT   |   Update On 2018-02-20 10:05 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை வரலாறு பேசும் வகையில் சிறப்பாக கொண்டாடுவோம் என அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
விராலிமலை:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.கே. வைரமுத்து தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-

அம்மாவின் 70-வது பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். தற்போது அம்மா நமக்கு தெய்வமாக இருந்து நம்மை வழிநடத்தும் வேளையில் இந்த ஆண்டு அம்மாவின் 70-வது பிறந்த நாளை புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மிகவும் பிரமாண்டமாக, கோலாகலமாக கொண்டாடி பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவதோடு இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்.

அம்மா நம்மிடம் நமது ஆட்சி 100 ஆண்டுகள் தொடர வேண்டுமென்றார். அப்படியென்றால் நமது கட்சி, நமது சின்னம், நமது கொடி எல்லாம் ஒன்று தான். அ.தி.மு.க. தான் நமது கட்சி, இரட்டை இலை தான் நமது சின்னம். அதை தொடர வேண்டும் என்று தான் அர்த்தம். நமது கட்சிக்கு ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்., ஒரே தலைவி அம்மா தான். அவர்களின் ஆசியோடு அ.தி.மு.க. என்ற அகல்விளக்கை அம்மா நம்மிடம் தந்து விட்டுச் சென்றுள்ளார்.

இந்த அகல்விளக்கு நின்று பிரகாசமாக எரியும், வெளிச்சம் கொடுக்கும். மற்றவர்கள் எல்லாம் வானில் தோன்றி மறையும் மத்தாப்பூ போன்றவர்கள். அதனால் எந்த பயனும் இல்லை. இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க. உள்ளது.

அம்மா நமது மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி, காவிரி கூட்டு குடிநீர் திட்டம், நமக்கு கட்சி அலுவலகம் தந்துள்ளார்கள். அண்ணா திமுக தொண்டர்களின் நலனுக்காக எனது உயிரையே கொடுப்பேன். நமது கட்சி அ.தி.மு.க. தான், நமது சின் னம் இரட்டை இலை தான். அதனை தொடர்ந்து பயனித்து 100 ஆண்டுகள் நல்லாட்சியை தந்து அம்மாவின் கனவை நிறைவேற்றுவோம்.

புதுக்கோட்டை மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை அதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து களப்பணியாற்றுவதோடு அம்மாவின் பிறந்தநாளை வரலாறு பேசும் வகையில் சிறப்பாக கொண்டாடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாரப்பட்டது.முடிவில் நகரச்செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார். #tamilnews
Tags:    

Similar News