செய்திகள்

பஸ் தொழிலாளர்களின் விரோதியாகவே அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வந்துள்ளது - ஆ.ராசா பேச்சு

Published On 2018-02-14 11:18 IST   |   Update On 2018-02-14 11:18:00 IST
பஸ் தொழிலாளர்களின் விரோத போக்குடனேயே அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வந்துள்ளது, தற்போதும் செயல்படுகிறது என ஆ.ராசா கூறியுள்ளார்.
புதுக்கோட்டை:

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரகுபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த 1996 முதல் 2001 வரை ஆட்சி நடத்திய தி.மு.க. பஸ் கட்டணத்தை சிறிதும் உயர்த்தவில்லை. அத்துடன் 15 ஆயிரம் புதிய பஸ்களையும் வாங்கினோம். பஸ் தொழிலாளர்களின் போனசும் 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

ஆனால் ஜெலலிதா ஆட்சிக்கு வந்ததும் அந்த போனஸ் தொகையில் 8.3 சதவீதத்தை குறைத்துவிட்டார். தொழிலாளர் விரோத போக்குடனேயே அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வந்துள்ளது. தற்போதும் செயல்படுகிறது.

நான் கியூபா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்கெல்லாம் அந்த நாட்டு தலைவர்களின் சாதனைகளை அவர்களின் கல்லறை கல்வெட்டுக்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவின் கல்லறையில் அவரின் சாதனைகளாக எதனை எழுதப் போகிறார்கள் என்று முன் கூட்டியே தெரிவித்தால் நல்லது.

ஒருவேளை அவர் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்ததை குறிப்பிடுவார்களா? கொள்ளையடித்து சொத்துக்களை பாதுகாக்கவே சசிகலா குடும்பத்தினரை தன்னுடன் வைத்திருந்தார். இதற்கெல்லாம் முடிவு கட்ட தி.மு.க. விரைவில் ஆட்சிக்கு வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஆ.ராசா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறந்ததை எதிர்ப்பவர்கள் ஆண் ஆதிக்க சக்தி மிகுந்தவர்கள். பெண் இனத்திற்கு எதிரானவர்கள் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பெண் என்பதால் என்ன குற்றம் செய்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டுமா. அதனை எதிர்ப்பவர்களை பெண் இனத்திற்கு எதிரானவர்கள் என்று கூற முடியுமா. ஆண் ஆதிக்கம், பெண் ஆதிக்கம் குறித்து பெரியார் கூறியதை அவர்கள் படித்து பார்க்க வேண்டும்.

முரசொலி மாறன் வளரும் நாடுகளுக்காக பாடுபட்டு தோகா மாநாட்டில் தோகா ஒப்பந்ததை பெற்றார். இந்தியாவின் தொழிற் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அவரையும் ஜெயலலிதாவையம் ஒப்பிட கூடாது.

2ஜி வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங் மீது குற்றச்சாட்டு கூறவில்லை. அமைதியாக இருந்தார்கள் என்று தான் கூறினேன். செய்ய வேண்டிய நேரத்தில் அவர்கள் செய்திருந்தால் இந்த வழக்கே வந்திருக்காது.

ரஜினி கமல் அரசியலுக்கு வருவது தி.மு.க.விற்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News