செய்திகள்

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் காளை உயிரிழப்பு

Published On 2018-02-11 16:53 IST   |   Update On 2018-02-11 16:53:00 IST
ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை உயிரிழந்தது. பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். #jallikattu #ministervijayabhaskar

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் தைத்திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக் கட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியை மாவட்ட கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, இலுப்பூர் டி.எஸ்.பி. கோபாலசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் கொம்பன் காளை அவிழ்த்து விடப்பட்டபோது, சீறிப் பாய்ந்து சென்று அதே வேகத்தில் அங்குள்ள கம்பத்தில் பயங்கர வேகத்தில் மோதி மயங்கியது.

இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் காளையை பரிசோதித்த போது அது உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் மற்றும் போட்டியை காண வந்திருந்த பொதுமக்கள் சோகமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து உயிரிழந்த காளை, இலுப்பூர் அருகே ஓலைமான்பட்டியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த கொம்பன் காளையை அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாங்கினார். பொங்கலையொட்டி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற இந்த காளை, வெற்றி பெற்று பரிசுகளையும் வென்றது. இந் நிலையில் இன்று திடீரென உயிரிழந்து விட்டது. #tamilnews #jallikattu #ministervijayabhaskar

Similar News