செய்திகள்
காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றத்தை காட்டும் வரைபடம்.

காஞ்சீபுரத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

Published On 2018-02-09 15:09 IST   |   Update On 2018-02-09 15:09:00 IST
காஞ்சீபுரம் நகரத்தில் பெருகி வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் நகரத்தில் பெருகி வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த போக்குவரத்து மாற்றம் நாளை முதல் (10-ந் தேதி) அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காஞ்சீபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காந்தி ரோடு, மூங்கில் மண்டபத்திலிருந்து கீரை மண்டபம் செல்லும் ரோடு ஆகியவை ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

நாளை (10-ந் தேதி) முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3 மணியில் இருந்து 9 மணி வரையும் இந்த சாலைகள் ஒருவழிப்பாதையாக செயல் படும்.

இந்த நேரங்களில் மேட்டுத் தெருவில் இருந்து காந்தி ரோடு வழியாக தேரடிக்கு செல்பவர்கள் மட்டுமே செல்ல முடியும். தேரடியிலிருந்து மேட்டுத் தெருவுக்கு வருபவர்கள் விளக்கடி கோயில் தெரு வழியாக வர வேண்டும்.

மேலும் பஸ் நிலையத்திலிருந்து கீரை மண்டபம் செல்பவர்கள் மூங்கில் மண்டபம் வந்து காந்தி ரோடு, விளக்கடி கோவில் தெரு வழியாக கீரை மண்டபத்திற்கு செல்ல வேண்டும். இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Kancheepuram

Similar News