செய்திகள்

இளங்கோவன் பேச்சுக்கு பதில் அளித்தால் நான் வகிக்கும் கல்வித்துறை மங்கி போய் விடும்: அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-02-05 17:03 IST   |   Update On 2018-02-05 17:03:00 IST
இளங்கோவன் பேசிய பேச்சுக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது. அப்படி அவரது பேச்சுக்கு நான் கருத்து கூறினால் நான் வகிக்கும் கல்வித்துறையே மங்கி போய் விடும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோபி:

காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோபியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சாடி பேசினார். “இப்பகுதியில் கல்வித்துறை அமைச்சர் என ஒருவர் இருக்கிறார். அவர் அரசியல் பேச மாட்டாராம். அவருக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது” என்று கூறினார்.

இந்நிலையில் இன்று கோபியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையனிடம், இளங்கோவன் உங்களுக்கு அரசியல் தெரியாது என்று கூறி உள்ளாரே...என்று நிருபர்கள் கேட்டதற்கு செங்கோட்டையன் கூறியதாவது.-

அவர்(இளங்கோவன்) பேசிய பேச்சுக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது. அப்படி அவரது பேச்சுக்கு நான் கருத்து கூறினால் நான் வகிக்கும் கல்வித்துறையே மங்கி போய் விடும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் எங்கெல்லாம் காலி பணியிடங்கள் உள்ளதோ அங்கு எல்லாம் காலி இடங்கள் நிரப்பப்படும். மாணவர்களின் கல்வி தரம் உயர்த்தப்படும்.

பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்க மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள்கள் அந்தந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதை படித்து மாணவர்களை பொதுத்தேர்வுக்கு சிறந்த முறையில் தயார்படுத்த வேண்டும்’’ என்று கூறினார். #Tamilnews

Similar News