செய்திகள்

உடல்நிலை பாதித்த மனைவியை கவனிக்க விடுமுறை கொடுக்காததால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜினாமா

Published On 2018-01-22 14:37 IST   |   Update On 2018-01-22 14:37:00 IST
மனைவியை கவனிக்க விடுமுறை கொடுக்காததால் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:

தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாஸ்கரன் (53). இவர் மனைவி மற்றும் மகன்களுடன் ராஜகீழ்ப்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

பாஸ்கரனின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாஸ்கரன் அடிக்கடி விடுமுறை எடுத்து மனைவியை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பணிக்கு வந்த பாஸ்கரன் மீண்டும் விடுமுறை தரும்படி இன்ஸ்பெக்டர் ரமேசிடம் கேட்டார். ஆனால் அவர் விடுமுறை கொடுக்க மறுத்து பாஸ்கரனுக்கு பணி ஒதுக்கினார். பின்னர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வேலை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

விடுமுறை கிடைக்காததால் விரக்தி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை எழுதி இன்ஸ்பெக்டர் அறையில் இருந்த மேஜை மீது வைத்தார். பின்னர் அங்கிருந்த மற்ற போலீசாரிடம் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதிர்ச்சி அடைந்த போலீசார், இன்ஸ்பெக்டர் ரமேசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பாஸ்கரன் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.

இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மணலியில் பணி செய்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கடந்த 3 மாதத்துக்கு முன்புதான் சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்துக்கு மாறுதல் ஆகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News