செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: முதலமைச்சர்-துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். #Jallikattu #Alanganallur
மதுரை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து வருகிறது.
பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது.
இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. முன்னதாக வாடிவாசலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்தார்.
“ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணி காப்போம் என்றும், விளையாட்டில் சீறி வரும் காளைகளுக்கும் எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும் இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறிதும் தீங்கு நேராமல் அரசு விதிமுறையை பின்பற்றி விளையாடுவோம் என்றும் உறுதி மொழிகிறோம்” என முதல்வர் வாசிக்க உடன் இருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அதன்பின்னர் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வாடிவாசலில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் பங்கேற்கின்றன. 1,241 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்க நாணயம், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், பீரோ, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. #Jallikattu #Alanganallur #tamilnews