சீர்காழி அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பலி
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் அடுத்த ஆனந்தகூத்தன் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விமல் (வயது 15). சீர்காழியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி அப்பகுதியில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் விமல் குளிக்க சென்றான்.
அப்போது குளத்தில் ஆழமான பகுதிக்கு விமல் சென்றதால் தண்ணீரில் தத்தளித்தான். இதை அவனது நண்பர்கள் கவனிக்கவில்லை.
பின்னர் சிறிதுநேரம் கழித்து நண்பர்கள் அனைவரும் குளித்து விட்டு கரை ஏறினர். அப்போது விமல் காணாததை கண்டு திடுக்கிட்டனர். குளத்தில் தண்ணீரில் விமல் மூழ்கியது தெரிய வந்தது.
இதையடுத்து சீர்காழி தீயணைப்பு நிலையத் தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து குளத்தில் விமல் உடலை தேடினர். சுமார் 2 மணி நேரம் போராடி விமல் உடலை மீட்டனர்.
பின்னர் மாணவன் விமல் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பொங்கல் பண்டிகையன்று குளத்தில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews