செய்திகள்

அரியலூர் அருகே விவசாயி அடித்துக்கொலை: மகன் வெறிச்செயல்

Published On 2018-01-06 09:59 IST   |   Update On 2018-01-06 09:59:00 IST
அரியலூர் அருகே நிலத்தகராறில் தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:

அரியலூர் அருகே உள்ள வெளி பிதுங்கி கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலம் (வயது 60), விவசாயி. இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு செல்வராஜ், சந்திரஹாசன் என 2 மகன்கள் உள்ளனர்.

இருவருக்கும் திருமணமாகி விட்டது. செல்வராஜ் கூலி வேலை செய்து வருகிறார். சந்திரஹாசனும், செங்கமலமும் விவசாயம் செய்து அதில் விளையும் பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இதனால் செல்வராஜின் மனைவி மங்கையர்க்கரசி, செங்கமலத்திடம் நீங்கள் இருவர் மட்டும் விவசாயம் செய்து பங்கு போட்டுக்கொள்கிறீர்கள். எனவே எங்களுக்கு உண்டான நிலத்தினை பிரித்து தந்தால் நாங்களும் விவசாயம் செய்வோம் என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இது குறித்து மங்கையர்க்கரசி செல்வராஜிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சந்திரஹாசனிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவரது தந்தை சந்திரஹாசனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகில் கிடந்த கட்டையால், தந்தை என்றும் பாராமல் செங்கமலத்தை தாக்கியுள்ளார். இதில் அவரது தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு செங்கமலம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் மகனே தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News