செய்திகள்

ஊதியம் வழங்கக் கோரி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2017-12-28 17:53 GMT   |   Update On 2017-12-28 17:53 GMT
ஊதியம் வழங்கக் கோரி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் தர்மபுரியில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தர்மபுரி பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு வட்டத்தில் 275-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அலுவலக உதவியாளர், தொலைபேசி கேபிள் பழுது பார்க்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த நவம்பர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஊதியத்தை வழங்கக் கோரி தொழிலாளர்கள் சில போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் ஊதியத்தை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள பொதுமேலாளர் அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் திரண்டனர். அங்கு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்திற்கு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பரிதிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சவுந்திரராஜன், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். இந்த போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகையில், ஊதியம் வழங்குவதற்கான நிதி வரவில்லை என்ற காரணத்தை கூறி ஒரு மாத காலமாக ஊதியம் மறுக்கப்படுகிறது. இதனால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கக்கூட பணமில்லாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே உடனடியாக ஊதியத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் எடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை எடுக்கும் வரை இரவு, பகல் என இடைவிடாமல் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News