செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.11½ லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.11½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர் :
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ரபீக்(வயது 24) என்பவருடைய உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையை சேர்ந்த பெண் முத்துநாச்சியார்(44) என்பவரிடம் இருந்த உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 190 கிராம் எடை கொண்ட 2 தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து தங்கம் கடத்தி வந்த முகமது ரபீக், முத்துநாச்சியார் ஆகிய 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.