செய்திகள்
இன்று சுனாமி நினைவு தினம்: மாமல்லபுரத்தில் மீனவர்கள் அஞ்சலி
சுனாமி நினைவு தினத்தையொட்டி இன்று கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் ஊற்றியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
மாமல்லபுரம்:
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதன் 13-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி கோவளம், நெம்மேலி, சூலேரிக்காடு, தேவநேரி, மாமல்லபுரம், கொக்கிலமேடு, வெண்புருஷம், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் போன்ற கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
அவர்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் ஊற்றியும், மலர்கள் தூவியும் வழிபட்டனர். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி சுனாமியால் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.