செய்திகள்

கிழக்கு கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘பாராசூட்’ சாகசம்

Published On 2017-12-25 15:35 IST   |   Update On 2017-12-25 15:35:00 IST
கிழக்கு கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘பாராசூட்’ சாகசம் பயணத்துக்கு 15 நிமிடத்துக்கு ரூ.2500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் வடநெம்மேலி பகுதியில் புதிய சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது.

மாமல்லபுரம்:

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, கடற்கரையோர விடுதிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தற்போது வடநெம்மேலி பாம்பு பண்ணை அருகே நடைபெறும் பாராசூட் சாகசம் சுற்றுலா பயணிகளுக்கு திரில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாலவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பைலட்டாக இருந்து சுற்றுலா பயணிகளை பாராசூட்டில் அழைத்து செல்கிறார். 15 நிமிடத்துக்கு ரூ. 2500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த பாராசூட் சாகசம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை மட்டுமே நடக்கும். 50 கிலோவுக்கு மேல் எடை கொண்ட நபர்கள் மட்டும் இந்த வான் சாகசத்தை அனுபவிக்கலாம்.

வடநெம்மேலி கடற்கரையில் இருந்து புறப்படும் பாராசூட் கோவளம் வரை கடற்கரை மார்க்கமாக சுற்றி வரும். புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் தரை இறக்கப்படும்.

இது குறித்து பாராசூட் சாகசம் செய்தவர்கள் கூறும்போது, இந்த பயணம் திரில்லாகவும், உற்சாகமாகவும் இருந்தது. வான்வெளியில் கடற்கரை அழகை ரசிப்பது வித்தியாசமாக இருந்தது என்றனர்.

இதுபற்றி பாராசூட்டை இயக்கும் மணிகண்டன் கூறியதாவது:-

இந்த பாராசூட் சாகச பயணம் மிகவும் பாதுகாப்பானது. இதில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு உபகரணம், ஹெல்மெட் வழங்கப்படும். பாராசூட்டில் இரண்டு நபர்கள் அமரும் வகையில் இருக்கை உள்ளது. இதில் ஒன்றில் நானும், மற்றொரு இருக்கையில் சுற்றுலா பயணியும் இருப்போம். காற்றின் வேகத்துக்கு ஏற்ப சாகச பயணம் தொடரும். காற்று வேகம் குறைந்தாலும் பாராசூட்டில் உள்ள மோட்டார் மூலம் சுற்றி வரலாம். எந்த பிரச்சினையும் இருக்காது. எனவே சாகச பயணம் செய்பவர்கள் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பாராசூட் சாகச பயணத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதனால் வடநெம்மேலி பகுதியில் கூட்டம் அலைமோதி புதிய சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது.

Similar News