ஒக்கி புயல் பாதிப்பால் குமரி கடற்கரை கிராமங்களில் களை இழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
நாகர்கோவில்:
ஒக்கி புயல் கடந்த 30-ந்தேதி குமரி மாவட்டத்தை தாக்கியதில் மாவட்டம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியது.
வாழை, தென்னை, ரப்பர் மரங்கள் மற்றும் நெற்பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல குமரி மாவட்ட மீனவர்களும் ஒக்கி புயலால் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். விசைப்படகுகள் மூலம் ஆழ் கடலுக்கு பல நாட்களுக்கு முன்பே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு ஒக்கி புயல் பற்றிய எச்சரிக்கை சரியாக சென்றடையவில்லை.
கடலில் ஏற்பட்ட சூறைக்காற்று, கொந்தளிப்பு போன்றவற்றை பார்த்து கரை திரும்பியபோது பலரது படகுகள் புயலில் சிக்கி சின்னாபின்னாமானது. பல மீனவர்கள் கடலில் மூழ்கி உயிர் இழந்தனர். ஏராளமான மீனவர்கள் படகுடன் கடலில் அலைக்கழிக்கப்பட்டதால் அவர்கள் கதி என்ன ஆனது? என்று தெரியாமலேயே உள்ளது.
கடலோர கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். வண்ண வண்ண மின்விளக்குகளால் மீனவர்களின் வீடுகள் ஜொலிக்கும். பெரிய கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் தொங்க விடப்பட்டு பண்டிகைகளை கட்டும்.
நள்ளிரவில் ஆலயங்களில் திரளும் மக்கள் பிரார்த்தனை செய்து ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி மகிழ்வார்கள். ஆனால் இந்த ஆண்டு குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் வழக்கமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை காண முடியவில்லை. ஆடம்பரங்கள் இன்றி மிகவும் எளிமையாகவே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்தது.
ஒக்கி புயலில் மீனவர்களை இழந்த குடும்பத்தினர் இன்னும் அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் கண்ணீருடனேயே காட்சி அளிக்கிறார்கள். அதேபோல் கடலில் மாயமாகி இதுவரை அவர்களது கதி என்ன வென்று தெரியாத மீனவர்கள் குடும்பத்தினர் அவர்கள் எங்காவது பத்திரமாக கரை ஒதுங்கி இருப்பார்கள். எப்படியும் சொந்த ஊருக்கு திரும்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை எதிர்பார்த்து கண்ணீருடன் உள்ளனர்.
தூத்தூர், பூத்துறை, நீரோடி, வள்ளவிளை, இரயுமன்துறை, இரவிபுத்தன் துறை, தேங்காய்பட்டினம், முள்ளூர் துறை போன்ற கிராமங்களில் உள்ள மீனவர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இங்கு நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகளின்போது பலியான மீனவர்கள், மாயமான மீனவர்களுக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பல இடங்களில் பலியான மீனவர்களின் படங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அவைகள் முன்பு அவர்களது குடும்பத்தினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பிரார்த்தனை செய்தனர்.
சின்னத்துறை மீனவர் கிராமத்தில் ஒக்கி புயலில் மாயமான 64 மீனவர்களின் படங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பத்திரமாக ஊர் திரும்ப வேண்டி மீனவர்கள் அங்கு கண்ணீருடன் வேண்டிய உருக்கமான காட்சியும் அரங்கேறியது.
ஒக்கி புயலில் சிக்கி மாயமான 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என்று மீனவர் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 176 மீனவர்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்க வந்த 41 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 26 பேர் என்று மொத்தம் 243 மீனவர்கள் மட்டும் இன்னும் மீட்கப்பட வேண்டுமென்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 8 மீனவர்கள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் மற்றும் ஹெலிகாப்டர், கப்பல்கள் மூலம் மாயமான மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. மீனவர்களையும், இந்த தேடுதல் வேட்டையின்போது விமானத்தில் அழைத்து செல்கிறார்கள். குமரி கடல் பகுதி மற்றும் மினிக்காய் தீவு, மேற்கு கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனாலும் மாயமான மீனவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கேரள கடல் பகுதியில் இறந்து ஒதுங்கிய 45-க்கும் மேற்பட்ட மீனவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட முடியாததால் அவை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் குடும்பத்தினர் அங்கு சென்று அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
டி.என்.ஏ. பரிசோதனை மூலம் மீனவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களில் 6 குமரி மீனவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.