செய்திகள்

கோவிலில் வெண்கல சாமி சிலை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Published On 2017-12-22 16:52 GMT   |   Update On 2017-12-22 16:52 GMT
ஆண்டிமடம் அருகே கோவிலில் இருந்த வெண்கல சாமி சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வரதராஜன்பேட்டை:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஓலையூர் கிராமம் கலியன்குளம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் அக்கோவிலின் பூசாரி சுப்பிரமணியன் (வயது 45) கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மார்கழி மாத பூஜையையொட்டி ஒலிப்பெருக்கியில் பாடல் போடுவதற்காக மருதுபாண்டியன் என்பவர் நேற்று காலை கோவிலுக்கு வந்தார்.

அப்போது கோவிலின் வெளிப்புற கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பூசாரி சுப்பிரமணியன் மற்றும் கோவில் நிர்வாகி கலியபெருமாள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர்கள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கோவில் கருவறை கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த வெண்கல காளியம்மன் சிலை திருட்டு போயிருந்தது கண்டு திடுக்கிட்டனர். சிறிய காளியம்மன் சிலை திருட்டு போகவில்லை. இதற்கிடையே சிலை திருட்டு நடந்த சம்பவத்தை அறிந்ததும் பொதுமக்கள் கோவிலின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் நித்யா (ஆண்டிமடம்), வேலுசாமி (ஜெயங்கொண்டம்) ஆகியோர் காளியம்மன் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலின் உண்டியல் சற்று தூரத்தில் கிடந்தது தெரியவந்தது. ஆனால் அதில் பணம் ஏதும் இல்லை.

மேலும், துப்பு துலக்க போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சற்று தூரம் வரை ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

திருட்டு போன சாமி சிலை 3¼ அடி உயரம் கொண்டது. சிலையின் பொலிவுக்காக அதில் 1 பவுன் தங்கம் சேர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையின் மதிப்பு ரூ.2½ லட்சம். கடந்த ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னர் தான் இந்த வெண்கல சிலை கோவிலில் வைக்கப்பட்டது என்று கோவில் நிர்வாகிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து திட்டமிட்டே இந்த சிலை திருட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருக்கின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News