செய்திகள்

ரூ.6ஆயிரம் லஞ்சம்: கூட்டுறவு அதிகாரி-கல்வி அலுவலக ஊழியருக்கு 7 ஆண்டு சிறை

Published On 2017-12-19 10:14 GMT   |   Update On 2017-12-19 10:14 GMT
ரூ.6ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு அதிகாரி- கல்வி அலுவலக ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் ஜெயங்கொண்டம் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் ஓய்வூதிய தொகை பெறுவதற்காக ராமலிங்கம், ஜெயங்கொண்டம் கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ராஜேந்திரனை சந்தித்து விண்ணப்பம் கொடுத்தார். ஆனால் அவர் ஓய்வூதிய தொகை கிடைக்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.6ஆயிரம் தர வேண்டும் என்று லஞ்சம் கேட்டாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமலிங்கம் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கடந்த 31-1-2013 அன்று, ரசாயனம் தடவிய ரூ.6ஆயிரம் பணத்தை ராமலிங்கத்திடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை ராஜேந்திரனிடம் கொடுத்த அங்கு மறைந்திருந்த போலீசார் ,ராஜேந்திரனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து நீதிபதி ரவி இன்று தீர்ப்பு அளித்தார். அதில் ராஜேந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதே போல் அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் ராணி. ஆசிரியையான இவர் அங்குள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பள உயர்வு கேட்டு, ஜெயங்கொண்டம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு பணியாற்றி வந்த ஊழியர் குமார், சம்பள உயர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.6ஆயிரம் தர வேண்டும் என்று லஞ்சம் கேட்டாராம்.

இது குறித்து ராணி , திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கடந்த 31-1-2012 அன்று குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கிலும் அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ரவி இன்று தீர்ப்பளித்தார். அதில் குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். லஞ்சம் வாங்கிய கூட்டுறவு அதிகாரி- கல்வி அலுவலக ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News