செய்திகள்

ஏரல் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி: 15 கோடி மதிப்பிலான நகைகள்-பணம் தப்பின

Published On 2017-11-29 04:19 GMT   |   Update On 2017-11-29 04:19 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரல்:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது கொற்கை. இங்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக மதிரேகா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், சம்பவத்தன்று மாலையில் வழக்கம்போல் வேலை முடிந்ததும், வங்கியை பூட்டு விட்டு சென்றார்.

மறுநாள் காலையில் வங்கி ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அப்போது வங்கியின் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரோ மர்மநபர்கள், வங்கிக்குள் வந்து சென்றது தெரிய வந்தது.

இதுபற்றி ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வங்கியில் இருந்த நகை, பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என்பது தெரிய வந்தது. இருந்தாலும் கைரேகை உதவி போலீஸ் சூப்பிரண்டு நாகரத்தினம், வங்கியில் பதிவான கைரேகைகள், தடயங்களை பதிவு செய்தார்.

வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மர்மநபர்கள் வங்கிக்குள் நுழைவது போன்றும், அவர்களில் ஒருவர் சிவப்பு நிற பிளாஸ்டிக் பையில் சிறு சிறு துளைகள் இட்டு, முகத்தில் அணிந்து இருந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் வங்கிக்குள் நுழைந்த சிறிதுநேரத்தில் கொள்ளை முயற்சியை கைவிட்டு திரும்பி சென்றதும் பதிவாகி இருந்தது.

விசாரணையில், நள்ளிரவில் வங்கிக்குள் புகுந்த மர்மநபர்கள், வங்கியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, கம்பிகளை கியாஸ் வெல்டிங் மூலம் துண்டித்தனர். அதன் வழியாக மர்மநபர்கள் வங்கிக்குள் நுழைந்தனர். பின்னர் வங்கியில் உள்ள அலாரத்தின் இணைப்புகளையும் துண்டித்துள்ளனர். அப்போது வங்கியின் வெளியில் ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டுள்ளதால் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு வங்கியின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பு வழியாக தப்பி சென்றுள்ளது தெரிய வந்தது.

கொள்ளை முயற்சி நடந்த வங்கியின் லாக்கரில் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள், பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அவைகள் அதிர்ஷ்டவசமாக கொள்ளை போகாமல் தப்பியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News