செய்திகள்

தலையணைக்கு அடியில் ரூ.35 ஆயிரம் சேமித்து வைத்த மூதாட்டி

Published On 2017-11-17 03:37 GMT   |   Update On 2017-11-17 07:08 GMT
தியாகதுருகம் அருகே மூதாட்டி ஒருவர் பழைய ரூ.500 நோட்டுகள் செல்லாது என்பது தெரியாமல் தலையணைக்கு அடியில் ரூ.35 ஆயிரம் சேமித்து வைத்திருந்தார். இந்த சம்பவம் அவர் இறந்தபிறகு தான் தெரியவந்தது.
தியாகதுருகம்:

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஓராண்டு முடிந்துவிட்டது. ஆனால் இதுபற்றி தெரியாத மூதாட்டி ஒருவர், தனது இறுதி சடங்கிற்காக பழைய ரூ.500 நோட்டுகளை சேமித்து வைத்துள்ளார். அவர் இறந்த பிறகுதான் அந்த ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன.

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி(வயது 74). திருமணமான ஓராண்டில் அவரது கணவர் அய்யம்பெருமாள் இறந்து விட்டார். அதன்பிறகு லட்சுமி தனது தம்பி முத்துசாமியின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த லட்சுமி நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து முத்துசாமியின் குடும்பத்தினர் லட்சுமி பயன்படுத்திய தலையணை உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்த எடுத்தனர். அப்போது தலையணைக்கு அடியில் பழைய ரூ.500 நோட்டுகள் ரூ.35 ஆயிரம் இருந்தது.

இந்த நோட்டுகளை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை என்று முத்துசாமி தெரிவித்தார்.
Tags:    

Similar News