செய்திகள்

தினகரன் வீட்டில் சோதனை: பதில் கூற அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு

Published On 2017-11-10 16:41 IST   |   Update On 2017-11-10 16:41:00 IST
தினகரன் வீட்டில் வருமான வரிசோதனை நடந்து வருகிறதே என்ற கேள்விக்கு, செய்திதாளை பார்த்து தெரிந்து கொண்டதாக என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:

ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியை சேர்ந்த 110 மாணவர்கள், சி.எஸ்.ஐ. பெண்கள் பள்ளிளை சேர்ந்த 124 மாணவிகள், நகரவை ரெயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 113 பேர் என 347 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில் இன்று நடந்தது.

கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பால முரளி வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் எதிர்கொள்ள வசதியாக மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகிறது. 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் தொடங்க ரூ. 60 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் தொடங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தினகரன் வீட்டில் வருமான வரிசோதனை நடந்து வருகிறதே என்று கேட்டதற்கு, செய்திதாளை பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறினார்.

மாநகராட்சி கமி‌ஷனர் சீனி அஜ்மல்கான், தாசில்தார் ஜெயக்குமார், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கே.சி. பழனிசாமி, கேசவ மூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News