செய்திகள்

புவனகிரியில் வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

Published On 2017-11-10 16:32 IST   |   Update On 2017-11-10 16:32:00 IST
புவனகிரியில் வியாபாரி வீட்டில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி:

கடலூர் மாவட்டம் புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 60). இவரது மனைவி தமிழரசி(50).

சுப்பிரமணி அங்கு கடை வீதியில் செருப்புக்கடை வைத்துள்ளார். கடந்த 30-ந்தேதி கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்று விட்டனர்.

அங்கு சுப்பிரமணியனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணி திருப்பூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவருடன் தமிழரசியும் சென்றிருந்தார். இன்று காலை தமிழரசி மட்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கீழே கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்தகொள்ளை சம்பவம் குறித்து புவனகிரி போலீசில் தமிழரசி புகார் செய்தார். அதன்பேரில் சிதம்பரம் உதவி துணை போலீஸ் சூப்பிரண்டு நிஷா, புவனகிரி இன்ஸ்பெக்டர் அம்பேத்கார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளையில் துப்புதுலக்க கைரேகை நிபுணர்கள் வரவைழக்கப்பட்டனர். அவர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

மொத்தம் கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும். இந்த கொள்ளைகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வியாபாரி வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News