செய்திகள்
குண்டேரிபள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறும் காட்சி.

ஈரோட்டில் பரவலாக மழை: குண்டேரிபள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2017-11-06 15:51 IST   |   Update On 2017-11-06 15:51:00 IST
சத்தியமங்கலம் நீர்பிடிப்பு பகுதிகளான குன்றி, விளாங்கோம்பை, எக்கரை உள்ளிட்ட பகுதியில் இரவு நேரங்களில் பெய்த மழையால் குண்டேரிபள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு:

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை மாநகரம், புறநகரங்களில் கடந்த 6 நாட்களாக வெளுத்து வாங்கிய மழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்தது.

ஆனால் ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவ இன்னும் அதிகளவில் பெய்ய தொடங்கவில்லை. அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. சத்தியமங்கலம் பகுதியில் 28 மி.மீட்டர் மழை பெய்தது. இதே போன்று வரட்டு பள்ளம், கொடிவேரி, குண்டேரிபள்ளம், பவானிசாகர், கொடிவேரி, சென்னிமலை போன்ற பகுதியிலும் பரவலாக மழை பெய்துள்ளது. அம்மாபேட்டை பகுதியில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது. இரவில் மழை பெய்துள்ளது.

சத்தியமங்கலம் நீர்பிடிப்பு பகுதிகளான குன்றி, விளாங்கோம்பை, எக்கரை உள்ளிட்ட பகுதியில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் குண்டேரிபள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று விநாடிக்கு 23 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்று விநாடிக்கு 500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 339 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 10 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 75.77 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1582 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆறுக்கு 1200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

Similar News