செய்திகள்

வீடு புகுந்து திருடிய கொள்ளையர்களை கட்டையால் தாக்கி மடக்கி பிடித்த இளம்பெண்

Published On 2017-10-31 10:47 IST   |   Update On 2017-10-31 10:47:00 IST
திருப்பூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபர்களை துணிச்சலுடன் தாக்கி போலீசில் ஒப்படைத்த கஸ்தூரியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள்.
திருப்பூர்:

திருப்பூர் பி.என். ரோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கஸ்தூரி (28). அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். மதியம் 3.30 மணியளவில் அவரது வீட்டின் பூட்டை திறந்து உள்ளே புகுந்த 2 வாலிபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகை 8 ஆயிரம் பணத்தை திருடி கொண்டு இருந்தனர்.

அந்த சமயத்தில் கஸ்தூரி வீடு திரும்பினார். அவர் வீட்டில் புகுந்து திருடர்கள் பணம், நகையை திருடி சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே சுதாரித்து கொண்ட அவர் அங்கிருந்த உருட்டு கட்டையை எடுத்து கொண்டு துணிச்சலுடன் உள்ளே சென்றார். திருடர்கள் 2 பேரையும் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார்.



வலி தாங்காமல் இருவரும் சத்தம் போட்டனர். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் இருந்த 2 வாலிபர்களையும் பிடித்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர்.

பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனுப்பர்பாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அப்போது அவர்கள் தேனி மாவட்டம் மங்கல மேடு பகுதியை சேர்ந்த எஸ்.சூர்யா (22), பி.சூர்யா(22) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபர்களை துணிச்சலுடன் தாக்கி போலீசில் ஒப்படைத்த கஸ்தூரியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள்.

Similar News