செய்திகள்

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயற்சி

Published On 2017-10-30 15:36 IST   |   Update On 2017-10-30 15:46:00 IST
திருப்பூரில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் ரோடு சின்னக்கரை அறிவொளி நகரை சேர்ந்தவர் அபுதாலிப். பர்னிச்சர் பொருட்கள் வியாபாரி.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் வீரபாண்டியை சேர்ந்த அலி என்பவரிடம் ரூ. 2 லட்சம் கொடுத்து சின்னக்கரையில் உள்ள பேக்கரி கடையை வாடகைக்கு தருமாறு கூறி உள்ளார்.ஆனால் பணத்தை பெற்று கொண்டு கடையை வாடகைக்கு கொடுக்காததால் அபுதாலிப் தொடர்ந்து அலியிடம் கேட்டதற்கு முறையாக பதில் அளிக்க வில்லை.

இதனால் மனமுடைந்த அபுதாலிப், அவரது மனைவி சாகிதா, உள்பட குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நொச்சிப்பாளையம் பிரிவு அருகே உள்ள அலியின் பேக்கரிக்கு சென்றனர்.

அப்போது அலி அங்கு இல்லாததால் கடையின் முன் அமர்ந்தனர். அவர்களது கையில் மண்ணெண்ணை கேன் வைத்திருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து மண்ணெண்ணை கேனை பறிமுதல் செய்தனர். அனைவரையும் விசாரணைக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில் பணத்தை பெற்றுக் கொண்ட அலிபேக்கரியை வாடகைக்கு கொடுக்காமல் வேறு ஒருவருக்கு ரூ. 3 லட்சத்துக்கு கொடுத்து விட்டது தெரிய வந்தது.

பேக்கரி கடை முன்பு கட்டில் போட்டு போராட்டம் நடத்திய காட்சி.

மண்ணெண்ணை கேனுடன் வந்தவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

கடந்த வாரம் கந்து வட்டி கொடுமைக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இது போல் திருப்பூரிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News