செய்திகள்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2017-10-26 12:41 IST   |   Update On 2017-10-26 12:41:00 IST
தமிழக அரசின் சீரிய முயற்சியால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இலுப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் இலுப்பூர், அன்னவாசல் பகுதியில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்த அவர், டெங்கு தடுப்பு முறைகளை பொது மக்களுக்கு விளக்கி கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது,

தமிழக அரசின் சீரிய முயற்சியால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு, டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், மாணவர்களிடம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதா? என்று மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

Similar News