செய்திகள்
திவ்யா - திரேஷா

தந்தை மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் அக்காள்- தங்கை வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2017-10-25 11:40 IST   |   Update On 2017-10-25 11:40:00 IST
கடலூர் அருகே தந்தை மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் அக்காள்- தங்கை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:

கடலூர் அருகே உள்ள குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது45). விவசாயி. இவரது மனைவி முருகம்மா. இவர்களுக்கு திவ்யா (22), தீபிகா(18), திரேஷா (15) ஆகிய 3 மகள்கள் இருந்தனர்.

திரேஷா தூக்காணாம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். கணேசனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவர் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார்.

நேற்று இரவும் கணேசன் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்தார். இதனால் முருகம்மா மற்றும் அவரது மகள்கள் மனவேதனை அடைந்தனர். பின்னர் அனைவரும் படுத்து தூங்கினர். நள்ளிரவு 2 மணி அளவில் திரேஷா எழுந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

காலையில் எழுந்த கணேசன் மகள் திரேஷா வி‌ஷம் குடித்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திரேஷாவை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் திரேஷா பரிதாபமாக இறந்தார்.

தனது தங்கை வி‌ஷம் குடித்து இறந்ததால் அக்கா திவ்யா மனவேதனை அடைந்தார். பின்னர் அவரும் வி‌ஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் திவ்யா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அக்காள்- தங்கை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News