செய்திகள்
மயிலாடுதுறை ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்திருப்பதை படத்தில் காணலாம்.

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தது

Published On 2017-10-23 11:41 IST   |   Update On 2017-10-23 11:41:00 IST
மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு கட்டிடத்தின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தபோது தாய்-சேய் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் பொறையாறு அரசே போக்குவரத்து பணிமனை கட்டிடம் இடிந்து விழுந்து 8 பேர் பலியானார்கள்.



இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பழுதான நிலையில் மோசமாக இருக்கும் அரசு கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் இன்று காலை கட்டிடத்தின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் தாய்- சேய் பரிசோதனை கூடம் உள்ளது.

இன்று காலை 7 மணியளவில் திடீரென பிரசவ வார்டு கட்டிடத்தின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தது.

இதனால் சத்தம் கேட்டு ஆஸ்பத்திரி ஊழியர்களும், பிரசவ வார்டில் இருந்த பொதுமக்களும் அலறியடித்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது கட்டிடத்தின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



கட்டிடத்தின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து சமயத்தில் நல்லவேளையாக தாய்- சேய் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி ஆஸ்பத்திரி டாக்டர்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தமிழகத்தில் குழந்தைகளுக்கான சிகிச்சை அளிப்பதில் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி 2-வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரசவ வார்டில் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Similar News