செய்திகள்

புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு

Published On 2017-10-19 15:07 GMT   |   Update On 2017-10-19 15:08 GMT
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.
புதுக்கோட்டை:

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று காலை தனது சொந்த ஊரான இலுப்பூரில் இருந்து தஞ்சை புறப்பட்டார். வழியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் தனி வார்டுக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் டாக்டர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளிடமும் குறைகளை கேட்டார்.

தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தை ஆய்வு செய்தபோது அங்கு துப்புரவு பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து துப்புரவு பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக ஒப்பந்த பணியாளர் சேதுராமனை நிரந்தர பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டார்.

அதேபோல் ரத்த பரிசோதனை மையத்தை பார்வையிட்ட அமைச்சர் 24 மணி நேரமும் ரத்த பரிசோதனை மையத்தின் கவுண்டர்கள் செயல்படுவதற்காக ரூ.3 லட்சம் தொகை ஒதுக்கி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News