செய்திகள்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்ரீதர் உடல் பிரேத பரிசோதனை

Published On 2017-10-16 06:44 GMT   |   Update On 2017-10-16 06:44 GMT
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்ரீதர் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் (வயது49). பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்ட அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கம்போடியாவில் உள்ள ஓட்டலில் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டார். போலி பாஸ்போர்ட்டில் அவர் சென்று இருந்ததால் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அவரது மகள் தனலட்சுமி மற்றும் உறவினர் ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக ஸ்ரீதரின் உடல் விமானம் முலம் சென்னை கொண்டு வரப்பட்டது. ஸ்ரீதரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருந்ததால் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய காஞ்சீபுரம் போலீசார் பலத்த பாதுகாப்புடன் செங் கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று காலை 11 மணியளவில் ஸ்ரீதர் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. ஸ்ரீதரின் உடலை பெறுவதற்காக அவரது மனைவி குமாரி, மகன் சந்தோஷ் குமார், மகள் தனலட்சுமி மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் வந்து இருந்தனர்.

இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. பிரேத பரிசோதனை நடைபெறும் இடம் முன்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்து இன்று பிற்பகல் ஸ்ரீதரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. பின்னர் ஸ்ரீதரின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்தி குன்றத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இன்று மாலை ஸ்ரீதரின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

ஸ்ரீதர் உடல் வருவதையொட்டி திருப்பருத்தி குன்றம்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சீபுரம் நகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News