செய்திகள்

எனக்கு டெங்கு காய்ச்சல் இல்லை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published On 2017-10-14 10:32 IST   |   Update On 2017-10-14 10:32:00 IST
எனக்கு டெங்கு காய்ச்சல் இல்லை, டெங்குவை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு கட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் இன்று மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதையொட்டி எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சியை செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசு அதில் தலையிடாது. நடிகர் சங்கமும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து தான் முடிவு செய்ய வேண்டும். விதிகளை மீறி தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பண்டிகை காலங்களில் எவ்வளவு பெரிய நடிகர்களின் படம் வெளிவந்தாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும்போது, தமிழகத்தில் இன்று முதல் 40 விநாடிகளில் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் எனக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் எனக்கு டெங்கு காய்ச்சல் இல்லை. இதனால் மகிழ்ச்சியாக உள்ளேன். டெங்கு காய்ச்சல் என்னை பாதிக்காததால் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு கட்ட தீவிர நடவடிக்கைகளை மும்முரமாக எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News