செய்திகள்

நெடுவாசலில் நடைபெற்ற 2-ம் கட்ட போராட்டம் வாபஸ்

Published On 2017-10-03 11:12 IST   |   Update On 2017-10-03 11:12:00 IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் நடைபெற்ற 2-ம் கட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி அனுமதி வழங்கியது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளாகி, வாழ்வாதாரமான விவசாயம் அழிந்துவிடும். இதனால் இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரி மாதம் 16-ந் தேதி முதல் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாட்டில் தொடர் போராட்டம் நடைபெற்றது. பின்னர் அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனங்களுக்கு மார்ச் 27-ந் தேதி மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கையெழுத்திட்டு அனுமதி வழங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள், ஏப்ரல் 12-ந் தேதி நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 2-ம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். இதில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பல்வேறு நூதன போராட்டங்களை தினமும் நடத்தி வந்தனர். 2-ம் கட்ட போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மத்திய, மாநில அரசுகளும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.

இந்தநிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 174-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில், போராட்டக்குழுவின் உயர்மட்டக்குழுத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஷ்பராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன், அண்ணாபரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது போராட்டக்குழுவின் உயர்மட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து உயர்மட்டக்குழு தலைவர் புஷ்பராஜ் கூறியதாவது;-

மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாய வேலைகள், மக்களின் வாழ்வாதார தொழில்களை துறந்து தான் இதுவரை அமைதி வழி போராட்டத்தை மக்கள் நடத்தி வந்தனர். முதல் கட்டமாக 22 நாட்களும், 2-ம் கட்டமாக 174 நாட்களும் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகள் போராடும் மக்களை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், பலமாதங்களாக போராடும் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, தற்போது விவசாய காலம் தொடங்கியுள்ளதால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது காந்தி பிறந்த நாளில் காந்திய வழி போராட்டம் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப்படும். மக்கள் போராடவில்லையே என்று எரிவாயு எடுக்க அனுமதித்து உள்ள ஜெம் நிறுவனத்தை ஊருக்குள் அனுப்ப மத்திய அரசு நினைத்தால் அடுத்து நடப்பது அமைதி வழி போராட்டமாக இருக்காது. அமைதி வழிப் போராட்டம் காந்தி பிறந்த நாளோடு முடிந்துவிட்டது. மீண்டும் நெடுவாசல் போராட்டம் தொடங்க வேண்டுமா? நிறுத்த வேண்டுமா? என்பதை மத்திய, மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News