செய்திகள்

தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்: ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தல்

Published On 2017-10-03 09:31 IST   |   Update On 2017-10-03 09:31:00 IST
தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறினார்.
புதுக்கோட்டை:

காந்தி ஜெயந்தியையொட்டி புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காந்திய சிந்தனைகள், கொள்கைகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு ஒரு ஆட்சி நடப்பதாகவே தெரியவில்லை. அ.தி.மு.க. உட்கட்சி மோதலால், தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப்பயன்படுத்தி மத்திய அரசு, தமிழக அரசை ஆட்டி வைத்துக்கொண்டு இருக்கிறது. அதன்படி அ.தி.மு.க. தலைவர்கள் தலையாட்டி கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், தமிழக அரசு தார்மீக பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். 1937-க்கு பிறகு தமிழகத்தில் இது போன்ற ஒரு மோசமான ஆட்சியை நான் கண்ட தில்லை. தமிழகத்தில் மாற்று அரசியலை கொண்டு வருவதற்காக தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட முயற்சியை மக்கள் புறக்கணித்து விட்ட னர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News