செய்திகள்

பள்ளித் தாளாளரிடம் ரூ.1½ லட்சம் மோசடி: 2 பேர் கைது

Published On 2017-09-30 16:05 IST   |   Update On 2017-09-30 16:05:00 IST
கடன் வாங்கி தருவதாக பள்ளித் தாளாளரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். வங்கி கடனுக்கு ஆசைப்பட்டு கையில் இருந்த பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாம்பரம்:

மதுரையைச் சேர்நதவர் ஈஸ்வரி (வயது45). இவர் அதே பகுதியில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். பள்ளிக் கூடத்தை விரிவுபடுத்த அவருக்கு பணம் தேவைப்பட்டது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரு கும்பல் ஈஸ்வரியிடம் தொடர்பு கொண்டு தங்களுக்கு வங்கியில் ரூ.1½ கோடி கடன் ஏற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு கமி‌ஷன் தர வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதற்கு தேவையான ஆவணங்களை ஆன்லைன் மூலமாக அனுப்பும்படி அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து கடன் பெறுவதற்காக அவர் ஆவணங்களையும் அனுப்பினார்.

இதற்கிடையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரியை அந்த கும்பல் தொடர்பு கொண்டு, முதல் கட்டமாக ரூ.50 லட்சம் கடன் தயாராகி விட்டது. அதற்கான கமி‌ஷன் தொகை ரூ.1½ லட்சம் கொடுத்து விட்டு கடன் தொகையை பெற்று செல்லும்படி கூறினர்.

இதனை நம்பி ஈஸ்வரி மதுரையில் இருந்து புறப்பட்டு நேற்று சென்னை வந்தார். அந்த கும்பலிடம் தொடர்பு கொண்டபோது பல்லாவரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தாங்கள் இருப்பதாகவும் வந்து பணத்தை பெற்று செல்லும் படியும் கூறினர்.

இதையடுத்து ஈஸ்வரி அந்த ஓட்டலுக்கு சென்றார். அங்கு 5 பேர் இருந்தார்கள். அவர்களிடம் கமி‌ஷன் தொகை ரூ.1½ லட்சத்தை அவர் கொடுத்தார்.

அதன்பிறகு ரூ.50 லட்சம் கொண்ட பண பார்சலை அவர்கள் கொடுத்து அதனை வீட்டிற்கு சென்று பிரித்து பாருங்கள் என்று தெரிவித்தனர்.

இதனால் ஈஸ்வரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஓட்டலை விட்டு வெளியே வந்த அவர் கும்பல் கொடுத்த பணப் பார்சலை பிரித்து பார்த்தார். அதில் வெறும் காகிதம் மட்டுமே இருந்துள்ளன. மேல் பகுதியில் மட்டும் ரூ.500 நோட்டுகளை வைத்து அதன் கீழ் வெள்ளை தாள்களை வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஈஸ்வரி பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் நடந்த ஓட்டலுக்கு விரைந்து வந்தனர். தங்கராஜ் (65), செல்வராஜ் (60) ஆகிய இருவரையும் கைது செய்தனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

வங்கி கடனுக்கு ஆசைப்பட்டு கையில் இருந்த பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News