செய்திகள்

கவர்னர் செயலரின் மகள்களுக்கு டெங்கு: சுகாதாரம், நகராட்சி துறைகள் தோல்வி என கவர்னர் குற்றச்சாட்டு

Published On 2017-09-30 05:41 GMT   |   Update On 2017-09-30 05:41 GMT
புதுவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதற்கு அரசின் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி துறைகளின் மோசமான செயல்பாடுகளே காரணம் என்று கவர்னர் குற்றம்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் கடந்த 2 மாத காலமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

அரசு மருத்துவமனை, சமுதாய நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு வந்தனர். இவர்களது ரத்த மாதிரியை சோதனை செய்ததில் இவர்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சாரம் ஞானபிரகாசம் நகரை சேர்ந்த இந்துமதி (வயது 36), கொட்டுப்பாளையம் ஜேசிங் (56) ஆகியோர் உயிர் இழந்துள்ளனர்.

இந்த நிலையில் புதுவை திருவள்ளுவர் நகர் புதுப்பாளையம் வீதியை சேர்ந்த பழனியப்பன் மனைவி விஜயலட்சுமி (50). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பலியானார்.

டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் உயிர் இழந்துள்ளனர். எம்.எல்.ஏ., அமைச்சர்கள் என காய்ச்சல் யாரையும் விட்டு வைக்கவில்லை. தற்போது புதுவை கவர்னரின் செயலாளர் தேவநீதிதாசின் 2 மகள்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 2 பேரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்து விவரம் வருமாறு:-

புதுவையில் உள்ள பல குடும்பத்தினர் டெங்கு காய்ச்சலால் அவதிக்குள்ளாகி உள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் எனது செயலாளர் தேவநீதிதாசின் 2 மகள்களும் அடங்கும்.

ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களை எனது செயலாளர் கவனித்து வருகிறார். இதற்கு புதுவை அரசின் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி துறைகளின் மோசமான செயல்பாடுகளே காரணம். இந்த துறைகள் தோல்வி அடைந்து விட்டது.

இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே டெங்கு பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்க சுகாதாரதுறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் கொசு மருத்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக 5 கொசு மருந்து தெளிக்கும் எந்திரங்கள் வாங்கப்பட்டு மருந்து தெளிக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News