செய்திகள்
கல்லூரி முன்பு விடுமுறை விடப்பட்டதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்

கொட்டும் மழையிலும் போராட்டம்: அரியலூர் அரசு கல்லூரிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

Published On 2017-09-06 11:44 IST   |   Update On 2017-09-06 11:44:00 IST
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அரியலூர் அரசு கல்லூரிக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது.
அரியலூர்:

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் அரியலூர் அரசு கல்லூரியில் படிக்கும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று கல்லூரியில் இருந்து அரியலூர் பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்ற மாணவர்கள், அங்கு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு ஆகியதும் 30 மாணவர்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்லூரி முதல்வர் இருளப்பன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அங்கேயே படுத்து தூங்கினர்.



இன்று காலை கல்லூரிக்கு வந்த மற்ற மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இதனால் போராட்டம் தீவிரமாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இன்று முதல் கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து முதல்வர் உத்தரவிட்டார்.

மேலும் 5 நாட்கள் விடுதியும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Similar News