செய்திகள்

தொழிலாளியின் மகள் டாக்டர் ஆக கூடாதா?: அனிதாவின் தந்தை கதறல்

Published On 2017-09-02 12:18 IST   |   Update On 2017-09-02 12:18:00 IST
நீட் தேர்வால்தான் எனது மகளை நான் இழந்து தவிக்கிறேன். இதற்கு முழுக்க முழுக்க மத்திய, மாநில அரசுகள்தான் காரணம் என்று அனிதாவின் தந்தை கூறினார்.
செந்துறை:

தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் ஒரு கூலித்தொழிலாளியின் மகளாக பிறந்த அனிதா எப்படியாவது மருத்துவர் ஆகவேண்டும் என்ற லட்சிய கனவுடன் படித்தார்.

மருத்துவ படிப்புக்கு மட்டுமின்றி வாழ்க்கைக்கும் எமனாக வந்த நீட் தேர்வால் நேற்று தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டார்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலித் தொழில் செய்து வந்தாலும் மனம் தளராத அனிதாவின் தந்தை சண்முகம், தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் தனது பிள்ளைகள் படக்கூடாது என்ற எண்ணத்தில் மகள் உள்பட 5 பிள்ளைகளையும் கடின உழைப்பால் படிக்க வைத்தார்.

சிறுவயது முதலே டாக்டராக வேண்டும் என்ற அனிதாவின் கனவை நிறைவேற்றவேண்டும் என்று அவர் அளித்த ஊக்கம் தான் பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெறவைத்தது.

அனைத்து வீணாகி போன நிலையில் ஸ்டெத்தஸ்கோப்பு மாட்ட வேண்டிய கழுத்தில் தூக்கு கயிறை மாட்டி உயிரை மாய்த்துக்கொண்ட மகளின் உடலை பார்த்து தந்தை சண்முகம் கதறி அழுத காட்சி அனைவரையும் உருக வைத்தது.

கண்ணீருடன் அனிதாவின் தந்தை சண்முகம் கூறியதாவது:-

சிறு வயதிலேயே தாயை இழந்த அனிதா எனது குறைந்த வருமானத்தை கருத்தில் கொண்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருங்காலத்தில் ஒரு டாக்டராக வேண்டும் என்ற லட்சிய கனவுடன் படித்தார். வீட்டுக்கு அவர் ஒரே பெண் குழந்தை என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்ட போதிலும் தான் ஒரு டாக்டராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.



பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றபோது நிச்சயமாக மருத்துவ படிப்பில் சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் அந்த அனிதாவின் கனவு சிதைந்து அவரது உயிரையே பறித்து விட்டது.

மருத்துவராக பார்க்க வேண்டிய மகளை மரண கோலத்தில் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நானும், எனது மகன்களும் பல்வேறு கூலி வேலைக்கு சென்று அனிதாவை எப்படியாவது டாக்டராக்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதற்கேற்றவாறு அவரும் கடினமாக படித்தார்.

இந்த ஊரிலேயே நன்றாக படிக்கும் பெண் என்ற பெயரும் வாங்கினார். நீட் தேர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த நேரம் அவருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்திருக்கும். அதனை கெடுத்து விட்டார்கள்.

இந்த நாட்டில் கூலித் தொழிலாளர்களின் மகளும், தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகளும் டாக்டராக கூடாதா? நீட் தேர்வால்தான் எனது மகளை நான் இழந்து தவிக்கிறேன். இதற்கு முழுக்க முழுக்க மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். அனிதாவுக்கு கால் நடை மருத்துவம் படிக்க கிடைத்த வாய்ப்பை அவர் விரும்பவில்லை. இதுபற்றி எதுவும் எங்களிடம் பேசாமல் விரக்தியிலேயே இருந்தாள்.

தான் விரும்பியபடி டாக்டராக முடியவில்லையே என்று மனதிற்குள் புழுங்கி தவித்த அனிதா இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாள். உச்சநீதிமன்றம் வரை என் மகள் மட்டுமல்ல, தமிழக மாணவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இனி மேல் இது போன்று எந்த ஒரு குடும்பத்திலும் நடக்க கூடாது.

எனது மகள் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக எடுத்து சென்ற போலீசார் அடக்குமுறையை கையாண்டனர். அதற்காக எங்களிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

அனிதாவின் பெரியம்மா மகன் அறிவுநீதி கூறும் போது, ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதித்திருக்க மாட்டார். அனிதாவும் இறந்திருக்க மாட்டார். மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு அதற்கென படித்த என் தங்கை அனிதாவும் மருத்துவர் ஆகியிருப்பார்.



ஆனால் ஜெயலலிதா இல்லாததால் தமிழ்நாட்டில் நீட் தேர்வும் நடந்து, அதன் காரணமாக இப்போது என் தங்கையையும் நாங்கள் இழந்து நிற்கிறோம்.

அனிதாவின் சாவுக்கு இப்போதுள்ள அரசுதான் முழுக்க முழுக்க காரணம். யார் என்ன ஆறுதல் கூறினாலும் இனி என் தங்கை எங்களுக்கு கிடைக்கமாட்டார் என்று கண்ணீர் மல்க கூறினார்.

அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரன் கூறும் போது, மாணவி அனிதாவின் தற்கொலை மத்திய அரசின் திட்டமிட்ட கொலை. அனிதாவை ஓராண்டு நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவரின் தந்தை அனிதா படித்ததும் போதும், நீட் வகுப்பு எல்லாம் வேண்டாம் என குடும்ப சூழல் காரணமாக விரக்தியுடன் கூறினார். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வந்த அனிதாவின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த இழப்பை கடந்து செல்ல முடியவில்லை. மத்திய அரசு மாநில பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறது. இன்னும் பல அனிதாக்கள் வெளியே தெரியாமல் இருக்கிறார்கள். அனிதாவின் மரணமே கடைசியாக இருக்க வேண்டும் என்றார்.

அனிதா படித்த பள்ளியின் தலைமையாசிரியர் நவநீத கிருஷ்ணன் கூறும் போது, பள்ளியில் நடத்தப்படும் தேர்வுகளில் கூட சாதாரணமாக படிக்காமல் அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்து தேர்வு எழுதுவார். நீட் தேர்வு முடிவால் அனிதா டாக்டராக முடியவில்லை. இது மிகவும் துயரமானது என்றார்.


Similar News