செய்திகள்

மாணவி அனிதா தற்கொலை: அரியலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு - தலைவர்கள் நேரில் அஞ்சலி

Published On 2017-09-02 11:45 IST   |   Update On 2017-09-02 11:45:00 IST
நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய-மாநில அரசுகளை கண்டித்து இன்று அரியலூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரியலூர்:

‘நீட்’ தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவர்களில் அனிதாவும் ஒருவர். இவர் அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.



இவரது தந்தை திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் இறந்து விட்டார். சிறு வயது முதலே அனிதாவுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை.

தந்தையின் குறைந்த வருமானத்தில் தனியார் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றார். மருத்துவ கட்-ஆப் 196.75 என்பதால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

ஆனால் ‘நீட்’ தேர்வில் அவருக்கு 700-க்கு 86 மார்க் மட்டுமே கிடைத்தது. இதனால் அவரது டாக்டர் கனவு தகர்ந்து விட்டது. சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியும் ஆசை நிறைவேறாமல் போனது.

டாக்டருக்கு படிக்க இடம் கிடைக்கவில்லை என்றாலும், வேளாண் படிப்பு படித்து விவசாயம் செழிக்க பாடுபடுவேன் என்று கூறி மனதை தேற்றி வந்தார். ஆனாலும் உள்மனதில் டாக்டர் ஆக முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.

இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பொதுமக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் கலெக்டர் லட்சுமி பிரியா, போலீஸ் சூப்பிரண்டு அபினவ் குமார் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் அனிதா உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அனிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து தந்தை சண்முகத்திடம் ஒப்படைக்க முயன்றனர். அப்போது சண்முகம் மற்றும் அனிதாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

நீட் தேர்வுக்கு ஒரு முடிவு வரவேண்டும், தமிழக அரசு பொறுப்பு ஏற்று நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.



விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர், காங்கிரஸ் கட்சி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் அனிதாவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர்களும் அனிதாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

இதனால் நேற்றிரவு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு அனிதாவின் உடலை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பெற்று கொண்டு சொந்த ஊரான குழுமூருக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அனிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குழுமூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்த குழுமூர் விரைந்துள்ளனர்.

இன்று மதியம் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன்பிறகு அனிதாவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய-மாநில அரசுகளை கண்டித்து இன்று அரியலூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. மாவட்டத்திற்குட்பட்ட அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

உணர்வுப்பூர்வமாக நடைபெறும் இந்த போராட்டத்தால் சிறு கடைகள் கூட திறக்கப்படவில்லை. வீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

Similar News