செய்திகள்

வேலூர் ஜெயிலில் சிறப்பு ஏற்பாடு: நளினி-முருகன் சந்திப்பு

Published On 2017-08-31 09:23 GMT   |   Update On 2017-08-31 09:24 GMT
வேலூர் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதத்தை கைவிட்ட நளினி- முருகனும் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று சந்தித்து உருக்கமாக பேசி கொண்டனர்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் மத்திய ஜெயிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் முருகன், ஜீவசமாதி அடைய தன்னை அனுமதிக்க கோரி கடந்த 18-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இதையடுத்து, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு கடந்த 26-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தியும், அதை ஏற்க மறுத்த முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

இதனால் அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்தது. சிறை மருத்துவமனையிலேயே முருகனுக்கு தினமும் ‘குளுக்கோஸ்’ ஏற்றப்பட்டு வந்தது.

இதற்கிடையே, முருகனின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி நளினியும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இதனால் சிறைத்துறையில் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி. பாஸ்கரன், முருகனுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, மனைவி நளினியை சந்தித்து பேச அனுமதிப்பது, சிறை விதிகளை மீறியதாக உறவினர்களை சந்திக்க விதித்த 3 மாத தடையை நீக்க வேண்டும் என முருகன் தெரிவித்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, 13-ம் நாளாக தொடர்ந்த உண்ணாவிரத போராட்டத்தை நேற்று மாலை பழச்சாறு அருந்தி முருகன் கை விட்டார். இதையடுத்து, நளினியும் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, நளினி-முருகன் சிறப்பு சந்திப்பு இன்று நடந்தது. பெண்கள் ஜெயிலில் உள்ள மனைவி நளினியை பார்ப்பதற்காக முருகனை, இன்று காலை 10.15 மணிக்கு, ஜெயில் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

நளினி-முருகன் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. முருகனை பார்த்ததும், நளினி கதறி அழுதார். மனைவியை, முருகன் சமரசம் செய்தார். உருக்கமான தகவல்களை இருவரும் பரிமாறிக் கொண்டனர். பிறகு, 11.15 மணியளவில் முருகன் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


Tags:    

Similar News