செய்திகள்

ஏரல் அருகே கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 64 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2017-08-31 10:31 IST   |   Update On 2017-08-31 10:31:00 IST
ஏரல் அருகே கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 64 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள உமரிக்காடு ஆற்றாங்கரை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அருண் கிருஷ்ணன். கட்டிட காண்டிராக்டரான இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது சொந்த ஊரான உமரிக்காட்டில் உள்ள முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடந்து வருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அருண் கிருஷ்ணனின் குடும்பத்தினர் அனைவரும் முத்தாரம்மன் கோவிலில் நடந்த சாமக்கொடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்பு வீடு திரும்பிய அவர்கள் தாங்கள் அணிந்திருந்த நகைகளை ஒரு பையில் மொத்தமாக வைத்து வீட்டின் ஒரு பகுதியில் வைத்து விட்டு தூங்கினர்.

நேற்று பகலில் மீண்டும் கோவிலுக்கு செல்ல அருண் கிருஷ்ணனின் குடும்பத்தினர் புறப்பட்டனர். அப்போது நகைகள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பையை பார்த்த போது அதில் இருந்த 64 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதனை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஏரல் போலீஸ் நிலையத்தில் அருண் கிருஷ்ணன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நகைகள் மொத்தமாக வைத்திருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர்.

அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக 4 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Similar News