செய்திகள்

குடிபோதையில் பள்ளியில் படுத்து தூங்கிய ஆசிரியர் ‘சஸ்பெண்டு’

Published On 2017-08-30 13:25 IST   |   Update On 2017-08-30 13:25:00 IST
விருத்தாசலத்தில் குடிபோதையில் பள்ளியில் படுத்து தூங்கிய ஆசிரியரை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோவிலானூரை சேர்ந்தவர் வேல்குமார் (வயது 44). இவர் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல் வேல்குமார் பள்ளிக்கு வந்தார். மதியம் 12 மணி அளவில் அவர் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு சென்றார். பின்னர் அவர் அங்கேயே படுத்து தூங்கினார்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் திடீரென்று பள்ளிக்கு வந்தார். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் நடத்துகிறார்களா? என்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு சென்றார். அப்போது அங்கு ஆசிரியர் வேல்குமார் குடிபோதையில் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே வேல்குமாரை எழுப்பி பணியின்போது ஏன் குடித்துவிட்டு வந்தீர்கள் என கேட்டார். மதுபோதையில் இருந்த வேல் குமார் அதிகாரியை ஆபாசமாக பேசினார்.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து மதுபோதையில் இருந்த ஆசிரியர் வேல்குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி முருகன் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கல்வி அதிகாரியை ஆபாசமாக திட்டியது மற்றும் பணியின்போது குடிபோதையில் இருந்ததாக போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரியர் வேல்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து ஆசிரியர் வேல்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டார்.

மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்பிக்க வேண்டிய ஆசிரியரே பள்ளியில் குடிபோதையில் படுத்து தூங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News