செய்திகள்

ஓடையில் கிடந்த தங்க புதையல்: விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை மிரட்டல்

Published On 2017-08-16 10:26 GMT   |   Update On 2017-08-16 10:26 GMT
திருப்பத்தூர் அருகே ஓடையில் கிடந்த தங்க புதையல் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிகாரிகள் தற்காலிகமாக விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள அகரம் கதிரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பி.அருண்குமார் (வயது 20), ஏ.அருண்குமார் (19). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஓடை அருகில் நடந்து கொண்டிருந்தனர்.

அப்போது மழை வெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு பூமியில் புதைந்து கிடந்த மர்ம பொருள் ஒன்று இவர்கள் 2 பேரின் கண்களில் தென்பட்டது. உடனே அவர்கள் அதனை எடுத்து பார்த்தபோது, அந்த பொருள் பழமை வாய்ந்த குவளை என தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் அந்த குவளையை உடைத்து பார்த்தனர். அதில் தங்க நகைகள் இருந்தது. பின்னர் யாருக்கும் தெரியாமல் அவர்கள் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர். மேலும் அதிலுள்ள நகைகளை 2 பேரும் பங்கு போட்டு கொள்வது என முடிவு செய்தனர்.

அதற்குள் 2 பேருக்கும் புதையல் கிடைத்த சம்பவம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியவந்தது. அனைவரும் ஒன்று திரண்டு அவர்களிடம் புதையலை காண்பிக்கும்படி கேட்டனர். ஆனால் அவர்கள் காலி பித்தளை குவளை மட்டும் காண்பித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் திருப்பத்தூர் தாசில்தார் ஸ்ரீராமிற்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த தாசில்தார் ஸ்ரீராம் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், 2 பேரும் முன்னுக்கு பின் முரணான பதில் தெரிவித்தனர்.

இதையடுத்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் தாசில்தார் ஸ்ரீராம் புகார் கொடுத்தார்.

இதனிடையே பி.அருண்குமார், ஏ.அருண்குமார் ஆகிய 2 பேரும் தாசில்தார் ஸ்ரீராமிடம், பித்தளை குவளையில் 2 கிராம் மதிப்பில் தாலி சரடில் கோர்க்கும் ஞானகுழல்கள் 15, 100 கிராம் மதிப்பில் வெள்ளி வளையல் ஆகியவை இருந்ததாக கூறி, அவற்றை ஒப்படைத்தனர்.

மேலும் புதையல் நகையை பதுக்கி வைத்துவிட்டு நாடகமாடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு அழைத்தால் தற்கொலை செய்வேன் என அருண்குமார் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிகாரிகள் தற்காலிகமாக விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News