செய்திகள்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மழையால் துண்டிக்கப்பட்ட பாலத்தில் அரசு பஸ் சிக்கியிருக்கும் காட்சி.

அரியலூர் அருகே பலத்த மழை: பாலம் துண்டிப்பு - அரசு பஸ் சிக்கியது

Published On 2017-08-10 15:12 IST   |   Update On 2017-08-10 15:13:00 IST
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பலத்த மழையால் பாலம் துண்டிக்கப்பட்டது. அரசு பஸ் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தோப்பேரியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அரியலூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டது.

பாலத்தின் கீழ் போடப்பட்டிருந்த குழாய்கள் வழியாக தண்ணீர் அதிக அளவில் சென்றதால் தற்காலிக பாலம் தண்ணீரில் கரைந்தது. அந்த சமயம் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இருந்து அரியலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது.

இரவு நேரம் என்பதால் அருகில் வந்தபோது தான் பாலம் துண்டிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. டிரைவர் சுதாரித்துக் கொண்டு பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குள், துண்டிக்கப்பட்ட பாலத்தின் பள்ளத்தில் பஸ் விழுந்து சிக்கிக்கொண்டது.

இதனால் பஸ்சுக்குள் அமர்ந்திருந்த பயணிகள் 10-க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் தவித்தனர். இதுபற்றிய தகவலை பயணிகள் செல்போன் மூலம் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு விரைந்து வந்த பொதுமக்கள் மற்றும் மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு பஸ்சுக்குள் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் லேசான காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்சு வேன் மூலம் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக செந்துறை ஆர்.எஸ்.மாத்தூர்-பெண்ணாடம் சாலை துண்டிக்கப்பட்டதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த வழியாக வந்த வாகனங்கள் குழுமூர் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.



Similar News